நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும்போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம், ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் அரை-அரச நிறுவனங்களால், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்து, செயல்படுத்தும் போது அது குறித்து, மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்காமையினால் அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகளை சமர்ப்பித்து வருவதுடன், அரச அதிகாரிகளுக்கும், அரசியல் பிரதிநிதிகளுக்குமிடையிலான தொடர்பு இன்மையால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளர் கவனம் செலுத்தியுள்ளார்.
இதன்படி, இந்த நடவடிக்கைகளின்போது, அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிக்கும் இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இனிமேல், அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் மூலம் மாவட்ட மட்டத்திலோ அல்லது பிரதேச மட்டத்திலோ அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போதும், செயல்படுத்தும் போதும், மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அது குறித்து அறிவித்து, அவர்களின் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.