ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு – நாளை வேட்பு மனு தாக்கல்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தல் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் மொத்தமாக இதுவரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை புதன்கிழமை காலை 09.00 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை நாளை காலை 11.00 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும்.

ஆட்சேபனைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் வேளையில் அப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வாகனங்கள் மாத்திரமே அப்பகுதிக்குள் நுழைய முடியும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் வேளையில் சரண மாவத்தையைச் சுற்றியுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படவுள்ளதால், பொது அலுவல்கள் மற்றும் வேறு கடமைகளுக்காக அப்பகுதிக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வேட்புமனுக்களை கையளிப்பதற்காக வேட்பாளருடன் இருவர் மாத்திரமே வருகைத்தர முடியும் எனவும் அவர்களுக்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

வேட்பாளரை ஏற்றிச் செல்லும் வாகனம் மாத்திரமே சரண மாவத்தைக்குள் நுழைய முடியும். வேட்பாளர் சரண மாவத்தையின் இறுதி வீதித் தடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேர்தல் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.

வேட்பாளர்களுடன் வரும் ஆதரவாளர்கள் தங்குவதற்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளில் பாதுகாப்பிற்காக சுமார் 1500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *