சீல் வைக்கப்பட்ட திருநெல்வேலி பால் பண்ணை!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70,000 ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி “பால் தொழிற்சாலை” கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது குறித்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. பொது சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30 இற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது. 

இவ் அறிவித்தல் பால் தொழிற்சாலை தலைவர், முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கு உரிய தெளிவுபடுத்தல்களுடன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கடந்த 12 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமை அவதானிக்கப்பட்டதை அடுத்து நேற்று (14) யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் பால் தொழிற்சாலை முகாமையாளரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் எஸ். லெனின்குமார், பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் மன்றில் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினை கருத்தில்கொண்டு குறித்த தொழிற்சாலையினை சீல் வைத்து மூடுமாறு பணிப்புரை விடுத்தார். 

அத்துடன் 70,000 ரூபாய் தண்டப்பணமும் விதித்ததுடன், திருத்த வேலைகள் முடிந்தவுடன் பொது சுகாதார பரிசோதகரினை மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார். 

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பால் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *