சீன கப்பல் வருகை – ரணிலின் சீன விஜயத்தின் பின்னரே அனுமதி குறித்து தீர்மானம்!

சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற திகதியில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை சீனாவை கேட்டுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள  இந்துஸ்தான் டைம்ஸ்  இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னரே கப்பலிற்கான அனுமதி குறித்து தீர்மானிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆராய்ச்சி கப்பலான சி யான் 6 கப்பலிற்கு ஒக்டோபரில் இலங்கையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில்  குழப்பநிலை காணப்படுகின்றது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்த கப்பலின் விஜயம் குறித்து இந்தியா இலங்கை ஜனாதிபதியுடன் கரிசனைகளை வெளியிட்ட பின்னரே இந்த நிலை காணப்படுகின்றது 

சீனா கப்பல் ஒக்டோபர் 25ம்திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையின் நாராவுடன் இணைந்து அடுத்த 17 நாட்களுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.கப்பல் கொழும்பு அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தங்கியிருக்கும்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியுள்ளது என இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ள அதேவேளை சீன தூதரகத்தின் வேண்டுகோள் பரிசீலனையில் உள்ளது இது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள்  ஏவுகணை கண்காணிப்பு கப்பல்கள் கண்காணிப்பு கப்பல்கள் போன்றவற்றை சுதந்திரமாக இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிப்பது குறித்து  இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின்; இந்திய விஜயத்தின்போது இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு கரிசனைகளை இந்தியா கருத்தில் கொள்ளவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கப்பலிற்கு அனுமதி வழங்குவது குறித்து கொழும்பிலிருந்து பல்வேறுபட்ட தகவல்கள் வெளியாகின்ற போதிலும் ஒக்டோபரில் சீன தலைநகரில் இடம்பெறும் புதிய பட்டுப்பாதை திட்டம் குறித்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பின்னரே இலங்கை ஜனாதிபதி சீன கப்பலிற்கு அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிப்பார் என தெரியவருகின்றது.

இலங்கை சீனாவின் கடனில் சிக்குண்டுள்ள நிலையில் சீன ஜனாதிபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் நிலையில் இலங்கை இல்லை என்பது வெளிப்படை.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்திலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதாலும் அதிகளவான பணவீக்கம் மற்றும் இலங்கை நாணயத்தின் டொலருக்கு எதிரான வீழ்ச்சி காரணமாக இந்த தசாப்தத்தில் மீட்சி சாத்தியமில்லை எனகருதப்படுவதாலும் இலங்கை தற்போது சர்வதேச நாணயநிதியத்தின் கடன்களும் கடன்வழங்கிய பாரிஸ் கழக நாடுகளும் தூக்கிநிறுத்தப்படும் நிலையில் உள்ளது.

இலங்கை பொருளாதார அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டவேளை இலங்கைக்கு  உணவு எரிபொருள் உட்பட 4 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்கியதன் மூலம் இந்தியாவே இலங்கையின் உதவிக்கு வந்தது.

நீர்மூழ்கி செயற்பாடுகளுக்காகவும் தென்னிந்தியா ஊடாக ஆபிரிக்க சமுத்திரத்திற்காக புதிய பாதையை கண்டுபிடிப்பதற்காகவும் இந்துசமுத்திர கடற்படுக்கையை சீனா ஆராய்ந்து வருவது குறித்த தனது கரிசனையை இந்தியா வெளியிட்டுவருகின்ற அதேவேளை  சீன கப்பலின் வருகையை நவம்பர் மாதத்திற்கு பிற்போடுமாறு சீனாவை இலங்கை  கேட்டுக்கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *