சர்வதேச சமூகம் தம்மிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே கடந்த 75 வருடங்களாக இழைத்த தவறை மீண்டும் இழைக்காதவாறு முன்னெடுக்கப்படவேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே கடந்த 75 வருடங்களாக இழைத்த தவறை மீண்டும் இழைக்காதவாறு முன்னெடுக்கப்படவேண்டும். 

எனவே இலங்கை சர்வதேச சமூகத்திடம் உதவிகளைக் கோரும்போது இவ்விடயம் சார்ந்து சர்வதேச சமூகத்திடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்புவிடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த வாரம் அங்கிருந்து பின்லாந்துக்கு சென்று பல்வேறு முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் சென்ற அவர், அங்கு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டதுடன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

குறிப்பாக நாட்டில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கு எதிராக எவ்வாறு இனவழிப்பு நடைபெற்றது என்பதை அங்கு விபரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தற்போது நாடு வங்குரோத்து நிலையிலுள்ள போதிலும், நாட்டின் மீட்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவிகள் அவசியம் என்றபோதிலும், எதுவும் மாறவில்லை என்று சுட்டிக்காட்டினார். இன்னமும் தமிழர்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்பட்டுவருவதாகவும், தானும் தனது சகாவான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரனும் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

அதேவேளை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் உதவிகளை நாடிவரும் சூழ்நிலையில், இதன்போது சர்வதேச சமூகம் அதனிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

‘இந்நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே கடந்த 75 வருடங்களாக இழைத்த தவறை மீண்டும் இழைக்காதவாறு முன்னெடுக்கப்படவேண்டும்.

கடந்த 75 வருடகால வரலாற்றுக்கு தமிழ்மக்கள் மீண்டும் முகங்கொடுக்காதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அதனைச் செய்யமுடியும்’ என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரது உரையில் சுட்டிக்காட்டினார்.

அதற்கு மேலதிகமாக அவர் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக்குழுவின் கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *