ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனையும் சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.
தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து பேசினாலும், அவை எதிர்பார்க்கப்பட்டவாறு செயல்வடிவம் பெறவில்லை என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த அவர்கள், இதனையொத்த கருத்துக்களையே தாம் சந்தித்த ஏனையோரும் கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) நாட்டை வந்தடைந்தது.
இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பின்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹெய்டி ஹோற்றாலா, போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஸ்லோ க்ரஸ்நோட் ஸ்கி, ஜேர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ஸ்றென் லுகே மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அவுஸ்ரா மோல்டெய்கினி ஆகிய நால்வரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகமட்ட அதிகாரிகள் இருவரும் என மொத்தமாக அறுவர் உள்ளடங்குகின்றனர்.
இக்குழுவினருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளும், தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்த சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களால் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், கங்குவெளியில் முறையற்ற விதத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படல், சிங்கள பௌத்தர்கள் வாழாத குச்சவெளியில் 23 விகாரைகளை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படல், குருந்தூர் மலையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படல் என்பன தொடர்பில் விளக்கிக்கூறியதுடன் இவற்றின் மூலம் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கள் பற்றியும் பிரஸ்தாபித்தார்.
அதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு முன்னதாக சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரை சந்தித்த வேளையில் இதனையொத்த கருத்துக்களையே அவர்களும் முன்வைத்ததாகக் குறிப்பிட்டனர்.
அதேபோன்று தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தமட்டில் அதிகாரப்பகிர்வு குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசினாலும், வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை என்று சுட்டிக்காட்டிய சம்பந்தன், தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டால் அரசியல் தீர்வை வழங்கவேண்டிய அவசியமில்லை என்பது போன்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் வெளிப்படுத்திவருவதாகத் தெரிவித்தார்.
அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர், அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தமது அவதானிப்பும் இதனை ஒத்ததாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதி இதுபற்றிப் பேசுகின்ற போதிலும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வாக்குறுதிகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் கூறினார்.
அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் இதுவரை 3 தடவைகள் வௌ;வேறு பெயர்களில் புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் அச்சட்டமூலங்களின் உள்ளடக்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானவையாகவே காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தமிழரசுக்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை அத்தகைய புதிய சட்டமூலங்களுக்கு தாம் எதிர்ப்பை வெளிக்காட்டும்போது, அதுபற்றி ஆராய்வதாகவும் திருத்தங்களை மேற்கொள்வதாகவும் கூறி அரசாங்கத்தினால் அவை கிடப்பில் போடப்படுவதாகத் தெரிவித்த அவர், எனவே இவ்வாறு இழுத்தடிப்புச்செய்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று விசனம் வெளியிட்டார்.
மேலும் நியாயபூர்வமான அரசியல் தீர்வை அடிப்படையாகக்கொண்டே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டுமென வலியுறுத்திய அவர், வட-கிழக்கில் தமிழ்மக்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்துமாறும், உரியவாறான அரசியல் தீர்வை வழங்குமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் தமது அறிக்கையில் இவ்விடயங்களை உள்ளடக்குவதாகவும், அவசியமான அழுத்தத்தைப் பிரயோகிப்பதாகவும் தமிழரசுக்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் வாக்குறுதி அளித்தனர்.