சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு:

சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிவில் சமூக செயற்பாட்டார்களான அருட்தந்தை ஜெகதாஸ், அருட்தந்தை ரொசான், க.லவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 மாதம் திகதி மாலை 5.30மணியளவில் இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்து சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,இளைஞர் யுவதிகள்,கர்ப்பிணிப்பெண்கள் என 186பேர் காணாமல்ஆக்கப்பட்டனர். இதன் நினைவு தினம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில், சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினால் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கையானது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரிடம் வழங்கப்பட்டது.

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மக்களின் குரலாக ஊடகத்துறையினர் செயற்படுவதன் காரணமாக தமது கோரிக்கையினை ஊடகவியலாளர்கள் ஊடாக வெளிக்கொணரவேண்டும் என்ற காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *