இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு இன்று (10) செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடியது.
தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும், எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இருப்பினும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிதரன், அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவே முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் அது அவருடைய விருப்பம் எனும்போதிலும், கட்சி அதற்கு அனுமதி அளிக்காது எனத் தாம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு இசைவாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கு சிறிதரன் உள்ளடங்கலாக சகலரும் இணங்கியதாகவும் கூறினார்.