கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீதான மேற்கொள்ளும் அச்சுறுத்தல் செயற்ப்பாடுகளை கண்டித்தும் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று (20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, உண்மையை மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி: ஸ்ரீ லங்கா இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும் ,OMP ஒரு ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள், வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்? உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.