முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 17 உடற்பாகங்களும், சில தடையப் பொருட்களும் இதுவரையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று இடம்பெற்ற 9ம் நாள் அகழ்வு பணிகள் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.