கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசாரால் இடையூறு:

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த மூன்றாவது நாள் அகழ்வாய்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு இவ்வாறு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டது.

அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்புக்கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபடமுடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தினர்.

அத்தோடு நீண்டதூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்திசேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களைப் பொலிசார் எச்சரித்துமிருந்தனர்.

இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பதற்கு  அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கடந்த (07) வியாழன் அன்று இரண்டாவதுநாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந் நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயர்த்தனத்தின் பின்னர், இந்தவிடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்திசேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *