இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
17 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 15ஆம் திகதி தற்காலிகமாக நிறைவடைந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு பின்னர், முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையில் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரேடார் கருவிகளைப் பயன்படுத்தி புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்துள்ளது என்பதை தீர்மானிக்க உள்ளதாக நேற்று அகழ்வு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அகழ்புப் பணிகளுக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிட்டார்.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.