நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 7,380 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் பிலிகுண்டலுவில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் திறப்பையொட்டி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 101.28 அடியாக இருந்தது.
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி, அதாவது கர்நாடகம்-தமிழக எல்லையான பிலிகுண்டலுவில் செல்லும் நீரின் அளவுப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்குமுறை குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
அதையடுத்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விடக்கூறி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்ட நிலையில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவிடமும், நீர்ப்பாசன துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் திட்டு வாங்க முடியாது என்றும் கூறியிருந்தார்.