கெஹெலிய மற்றும் ரமித் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சரின் முன்னாள் ஒருக்கிணைப்பு அதிகாரியான நிஷாந்த பண்டார ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். 

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபர்களும் தலா 50,000 ரூபா ரொக்க பிணையிலும் மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும், சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பிணையாளர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார். 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையில், ரமித் ரம்புக்வெல்லவின் மாதிரி கையொப்பங்களை விசாரணைக்காக பெற வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதற்காக அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகி கையொப்பங்களை வழங்க வேண்டும் எனவும் கோரினார். 

இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், ரமித் ரம்புக்வெல்ல நாளை (ஜூன் 04) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகி மாதிரி கையொப்பங்களை வழங்க உத்தரவிட்டார். 

இந்த முறைப்பாடுகள் மீண்டும் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *