முன்னணி நடிகையாக முன்னர் கொடிகட்டி பறந்த கௌதமி தன்னுடைய 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்து விட்டதாக காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கௌதமிக்கு தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் ஏராளமான சொத்துக்கள் இருந்திருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அழகப்பனிடம் அதை விற்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்.
ஆனால் அவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு போலி ஆவணங்களை தயார் செய்து கௌதமியை ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கௌதமி தற்போது பறிகொடுத்திருக்கிறார்.
இதை வங்கி பரிவர்த்தனையின் மூலம் கண்டுபிடித்ததாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அழகப்பனிடம் கேட்டபோது அரசியல் பின்புலத்தை காட்டி மிரட்டுவதாகவும், தன்னுடைய மகளுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த கௌதமி தற்போது தன்னுடைய சொத்துக்களை மீட்டுக் கொடுக்குமாறு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவருடைய இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.