கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காதென, பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிளிநொச்சி ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமானது கொழும்பிலுள்ள ஜெர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்குச் சமமான உயர் அங்கீகாரத்தை கொண்ட நிறுவனம் என்பதால், கிளிநொச்சியிலுள்ள நிறுவனம் சுயாதீனத்தை இழக்காது என்று பிரதமர் தெரிவித்தார்.கிளிநொச்சியிலுள்ள இலங்கை – ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் தொடர்பில் நேற்று தமிழரசுக் கட்சி எம். பி. எஸ்.சிறீதரன் சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் உள்ள நிறுவனம் தமது சுயாதீனத்தை இழக்காது. கொழும்பிலுள்ள இலங்கை -ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் கிளையாக அது இயங்குவதால், இந்த நிறுவனத்திற்கு கொழும்பில் உள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும் தரத்திற்கு சமமான உயர் அங்கீகாரம் வழங்கப்படும். அதேபோன்று, அதிகளவான மாணவர்களுக்கு கற்கைநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.அதேவேளை,தற்போது அங்கு பயிற்சிபெறும் தமிழ், சிங்கள முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிட வேண்டுமானால் 177 தமிழ் மாணவர்களும், 226 சிங்கள மாணவர்களும், 46 முஸ்லிம் மாணவர்களும் அங்கு கற்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் இவர்கள் கற்கின்றனர்.அண்மையில் கிளிநொச்சியில் குறித்த நிறுவனத்திற்கு சென்று ஆராய்ந்தேன்.
அங்கு மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக அறிந்தேன். அதன்படி வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாணவர்களுக்கான நலன்புரி விடயங்கள் மற்றும் விடுதி வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.