முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்தாவதுநாளாக (11) நேற்று இடம்பெற்ற நிலையில், அகழ்வுப் பணிகளின் நிறைவில் மேற்படி மனித எச்சங்கள் குவியலாக காணப்படும் தகவலை முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.
அவர் மேலும் கூறூகையில்…
ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாகவும், பல அடுக்குகளாகவும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படுகின்றன. எனவே எத்தனை மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளன என்பதை தற்போது இனங்காணமுடியாதுள்ளது.
படிப்படியாக அகழ்வுகளை மேற்கொண்டு, மனித எச்சங்களின் மேலுள்ள மண்ணை அகற்றும்போதுதான் எத்தனை மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் உள்ளன என்பதை இனங்காண முடியும்.
இன்னும் ஓரிரு தினங்களில் எத்தனை எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ள என்பதை தெரிவிக்கமுடியும்.
மேலும், இதுவரை 14மீற்றர் நீளத்திலும், 3மீற்றர் அகலத்திலும், 1.5மீற்றர் தொடக்கம் 2மீற்றர் வரையான ஆழத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை மொத்தம் 04 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த அவர் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் பல தகவல்கள் கிடைக்கலாம், மேலும் பல புதிய மனித எச்சங்கள் கண்டறியப்படலாம் என்றார்.