முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த சம்பவத்தின் சந்தேகநபரை நேற்று (14) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவ் வீதியால் பயணித்த சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் வழிமறித்தனர்.
எனினும், பொலிஸாரின் கட்டளையையும் மீறி குறித்த டிப்பர் வாகனம் செல்லத் தொடங்கிய நிலையில் டிப்பரின் சக்கரங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த டிப்பர் வாகனம் பொலிஸாரை விபத்திற்கு ஆளாக்க முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.