ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த அதிவேக படகு சேவையானது 60 கடல் மைல் தூரத்தை கடந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து செயற்படத் தொடங்கும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்த உள்ளன.
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியாவினால் இந்த அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், துறைமுக கால்வாய் தோண்டப்பட்டு வருவதாக மாநில கடல்சார் சபை தகவல்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் இந்தச் சேவை இலங்கையர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.