எரிக்கப்படும் வைத்திய கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு!

திருகோணமலை வைத்தியசாலையில் எரிக்கப்படுகின்ற வைத்திய கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு மக்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

திருகோணமலை வைத்தியசாலையின் கழிவுப் பொருட்களை எரிக்கின்ற இயந்திரப் பகுதியின் புகைபோக்கியானது ஒரு வருடத்துக்கு மேலாக உடைந்துள்ள நிலையில் அது திருத்தப்படாமல் அப்பகுதியில் வைத்தியசாலைக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த இயந்திரத்தினூடாக வெளியேறுகின்ற புகையினால் வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பகுதிகளிலும் வளி மாசடைவதோடு, வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள், திருகோணமலை கடற்கரையை நோக்கி வருகின்ற உல்லாச பயணிகள் உட்பட அயலில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இப்பகுதியில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுகின்ற ஆபத்து மிகுந்த மருந்துக்கழிவுகள், சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடற்பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை நேர அட்டவணையின்றி எரிக்கப்படுவதாக தெரியவருகின்றது.  

ஆரம்பத்தில் இந்த புகையானது கிட்டத்தட்ட 60 அடி உயரமான புகைபோக்கியின் மூலம் மேல் வளிமண்டலம் நோக்கி விடுவிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது 40 அடி உயரமான புகைபோக்கி உடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்யாமல் கழிவுப் பொருட்கள் எரிக்கப்பட்டு வருவதனால் புகையானது சூழலில் பரவி வருகிறது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த புகை மக்களுடைய சுவாசத்திலும் கலக்கிறது. இது தொடர்பாக பலரினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை இந்த இயந்திரம் சீர் செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *