எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு:

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில், திடீரென குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

என்றாலும், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியதாவது,

“பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறினாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்றுவரை மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்படுகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், கைதானவர்களை உடன் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

90 ஆவது நாளாகவும் தொடரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு நீதி கிட்ட வேண்டும்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்பவில்லை. எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொணடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக ஜனாதிபதியை சந்திக்கின்றீர்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எமது விருப்பு வெறுப்பிற்கு அப்பால் ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரை சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வினை பெறுவதற்கான எமது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

மக்களுக்கு சேவையாற்றவே மக்கள் எம்மை தெரிவுசெய்துள்ளனர். மக்களின் பணத்தை கொள்ளையடித்து வாழ்வததற்கு அல்ல” எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *