நாட்டு மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறுசில அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஜனநாயகத்தின் சிறந்ததோர் குறியீடாகும். எது எவ்வாறெனினும் என்மீது நம்பிக்கை வைத்த மற்றும் எனக்கு வாக்களிக்காத சகல பிரஜைகளையும் இலங்கையர்களாகக் கருதி, எவ்வித மாறுபாடுகளுமின்றி, அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பேன் என இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு தேர்தலில் வெற்றியீட்டி ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதனையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகையில்,
இம்முறை ஜனாதிபதித்தேர்தலை நடத்தியதே ஒரு பெரும் வெற்றியாகும். மாகாணசபைத்தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளன. உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடத்தப்படாமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதித்தேர்தலை நடத்தியமையையே நான் இங்கு அடையப்பட்ட முதலாவது வெற்றியாகக் கருதுகின்றேன். அதேபோன்று மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கக்கூடியவாறான நியாயமான தேர்தலை நடத்துவதை முன்னிறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கடின முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் நன்றி கூறுகின்றேன்.
அடுத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதைப்போன்று நியாயமான தேர்தல்க்ளை நடாத்துவதை முன்னுறுத்தி பல்வேறு பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வது என்னுடைய தனிப்பட்ட பொறுப்பு மாத்திரமன்றி, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகலரதும் பொறுப்பாகும். எனவே அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் நான் விசேட அவதானம் செலுத்துவேன்.
தற்போது எமது நாடு சமூக, பொருளாதார, வெளிநாட்டுறவு என பல்வேறு பிரிவுகளிலும் பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மக்கள் ஆணையின் மூலம் தெரிவுசெய்யப்படும் அரசாங்கத்தின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கமுடியும் என நாம் கருதினோம்.
எந்தவொரு ஆட்சி நிர்வாகத்துக்குமான பலத்தையும், அது பயணிக்கவேண்டிய திசையையும் மக்கள் ஆணையே வழங்குகின்றது. கடந்த காலங்களில் மக்கள் ஆணை பல்வேறு விதங்களில் திரிபுபடுத்தப்பட்டதைப் பார்த்தோம். ஆகவே அந்த மக்கள் ஆணையை நாட்டில் மீளவும் ஸ்தாபிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கமைய முதலில் ஜனாதிபதித்தேர்தலையும், அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தேர்தலையும் நடாத்தவேண்டும் என்ற பொது நிலைப்பாடு உள்ளது.
எமது நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றைப்போன்று தேர்தல் நடாத்தப்படும் முறையும் மாறவேண்டும். தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் அதனைக் கொண்டாடுவதும் நிறுத்தப்படவேண்டும். அதற்கேற்றவாறு தேர்தலின் பின்னர் வெடி கொளுத்துதல் போன்ற ஏனையோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நாம் எமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். அதற்கமைய வன்முறைகளற்ற அமைதியான தேர்தலாக இத்தேர்தல் நடைபெற்றுமுடிந்திருக்கிறது. இந்த நிலை தொடரவேண்டும் எனவும், எந்தவொரு பிரஜையும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் வலியுறுத்துகின்றோம்.
அடுத்ததாக எமது நாடு பல்வேறு பிரிவினைகளுக்கு முகங்கொடுத்திருந்தது. அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளையும் அனுபவித்திருந்தது. அப்பிரிவினைகளைக் களையவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இந்த சவாலை தனிநபராலோ, தனியொரு கட்சியினாலோ அல்லது தனியொரு குழுவினாலோ கையாளமுடியாது. ஆகவே இந்நோக்கத்துக்காக சகலரையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுக்கின்றோம். அதுமாத்திரமன்றி இதுகுறித்து எதிர்வருங்காலங்களில் கட்டம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தி முன்நோக்கிப் பயணிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
நிறைவாக நாட்டு மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறுசில அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஜனநாயகத்தின் சிறந்ததோர் குறியீடாகும். எது எவ்வாறெனினும் என்மீது நம்பிக்கை வைத்த மற்றும் எனக்கு வாக்களிக்காத சகல பிரஜைகளையும் இலங்கையர்களாகக் கருதி, எவ்வித மாறுபாடுகளுமின்றி, அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பேன் என்றார்.