உலக அரசியலின் மாற்றத்திற்கேற்ப நாமும் மாறுவோம் : அனுரகுமார திஸாநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை விலைக்கு வாங்கியதை போன்று சர்வதேச நாடுகளால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன்.

இந்திய விஜயம் குறித்து சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரசிங்க ஆகியோரின் தரப்பினர் கலக்கமடைந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.

அக்குற்றச்சாட்டுக்களைக் கண்டு நாங்கள் கலக்கமடையவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தல் காலத்தில் ஒன்றாக மேடையேறுவார்கள்.

அதே போன்று மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் 2019 ஆம் ஆண்டு போன்று கூட்டணியமைப்பார்கள்.

ரணிலுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் காணப்படுவதால் அவர்கள் ஒன்றிணைவது நிச்சயமற்றதாக உள்ளது.

ஒருவேளை ஒன்றிணையலாம். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அனைவரும் நண்பர்கள்.

தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் உள்ளதாக மக்கள் மத்தியில் காட்டிக் கொள்வார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெறும் நபருடன் இணக்கமாகச் செயற்படுவார்கள்.

காலம் காலமாக இந்த போலி மாற்றமே இடம்பெறுகிறது. இம்முறை இது மாற்றமடைய வேண்டும்.

மஹிந்த ராஜபக்சவை விலைக்கு வாங்கியதை போன்று எங்களை உலக நாடுகளால் விலைக்கு வாங்க முடியாது.

இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன.

நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை” என அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *