உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேற்பார்வையாளரான பெண் கைது!

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் (சான்று பெற்ற பெண்கள் பாடசாலை – கிழக்கு மாகாணம்) ஒலி எழுப்பும் மணி ஒன்றை களவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நவம்பர் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் குறித்த சிறுவன் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தவர் மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 17 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக கடந்த புதன்கிழமை (29) அதிகாலை 3.30 மணியளவில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது, சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் குறித்த சிறுவனின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரின் வழிகாட்டலில் பல்வகை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜனகீதன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த நன்னடத்தை பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய, குறித்த சிறுவனை அன்றையதினம் தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (02) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த சிறுவன் சம்பவ தினமான இரவு உணவு உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்களை வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

தனது மகனின் மரணத்தில் பல விதமான பொய் குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தாம் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *