உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது: ஜனாதிபதி ரணில்

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்த பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் 4 ஆவது சரத்தின் கீழ் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறுகிறது. அத்துடன் பாலின சமத்துவ சட்டமூலமானது எந்த தேசிய கொள்கையைக் குறிக்கிறது என நீதிமன்றங்கள் கேள்வி எழுப்புகின்றன. இது 2011 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் பற்றிய தேசியக் கொள்கையைக் குறிக்கிறது. அத்துடன் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச மரபுகளைக் கடைப்பிடிப்பது அனைத்து அரசாங்கங்களின் கடமை . இது இலங்கை நடைமுறைப்படுத்த இணங்கிய நிலையான அபிவிருத்திக் கொள்கைகளுக்கும் இணங்குவதாகவும் உள்ளது

பாலின சமத்துவச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட பிரிவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பத்து நீதிபதிகள் கொண்டு வழங்கிய தீர்ப்பு உட்பட சில தீர்ப்புகளை அது புறக்கணித்துள்ளது. குற்றவியல் சட்டத்தில் பிரதம நீதியரசர் செய்த திருத்தத்தையும் நீதிமன்றம் புறக்கணித்துள்ளது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட முன்னர் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை

இந்த சட்டமூலத்தில் பாலின சமத்துவம் பற்றி குறிப்பிடும்போது 2011 ஆம் ஆண்டு முதல் பெண்களை பலப்படுத்தும் சட்டம் நடைமுறையில் உள்ளது. அது சம்பந்தமாக அனைத்து மரபுகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். இது தொடர்பில் கமலாவதி குழு, சரத் ஜயசிங்க குழு முன்னிலையில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ஷிராணி பண்டாரநாயக்க வழங்கிய தீர்ப்பில் அநீதி, பாகுபாடுகளை இல்லாதொழித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதை நான் இந்த நேரத்தில் கூற விரும்புகின்றேன். அதன்படி, பெண்களுக்கான சமத்துவத்தை உருவாக்க தண்டனைச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தோம். ஆனால் உயர் நீதிமன்றத்தால் இந்த சட்டமூலம் தொடர்பான விடயத்தில் அந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை

முன்னைய தீர்ப்புகளை ஆராயாமல் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்? சட்ட வரைவுப் பிரிவு வழங்கிய உண்மைகளின் அடிப்படையில் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. உயர் 1972 அரசியலமைப்பை ஆராய வேண்டும். சட்டமூலமொன்றை கொண்டுவரும்போது அது தொடர்பில் ஆலோசனை வழங்கும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதற்கு அப்பால், உயர் நீதிமன்றத்தால் தற்போதுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீற முடியாது. உயர் நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது.

இந்த தீர்ப்பானது பிரிவெனா கல்வி சட்டமூலத்திற்கும் சவால் விடுகிறது.பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்

இதற்காக நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு அழைக்க வேண்டும் என நான் முன்மொழியவில்லை, ஆனால் பாராளுமன்ற மகளிர் குழுவில் இருந்து பெரும்பான்மையான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன், சட்டமூலத்தை மீள் நிர்ணயம் செய்வதற்கு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதே சிறந்தது . “உச்சநீதிமன்றத்தை சவாலுக்கு உற்படுத்துவதை விடவும் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு பரிந்துரைப்பது நல்லது. உயர் நீதிமன்றம் வழங்கிய ஒவ்வொரு தீர்மானத்தையும் ஆராய தெரிவுக்குழுக்களை நியமிப்பது ஆரோக்கியமான நடவடிக்கையல்ல” என்றார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் உயர் நீதிமன்றத்திற்கு சவால் விடவில்லை . மக்களின் இறைமை தொடர்பில் ஒரு விடயத்தை மட்டுமே முன்வைத்தேன்.மக்களின் இறையாண்மை பாராளுமன்றத்தில் உள்ளது. இந்தக் கருத்தைத்தான் நான் எழுப்பினேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *