இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.
இதில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வரும் நிலையில், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.