இலங்கைக்கு மேலும் 200 மில்லியனை வழங்க உலகவங்கி அனுமதி:

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ​கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இந்த நிதி வசதியானது இலங்கையின் முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை காண்பிக்கிறது.

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.இந்த இரு வருட வேலைத்திட்டம் (2023-2024), வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடி மக்கள் மீதான தாக்கத்தை குறைத்து முழுமையான பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.உலக வங்கியின் இந்த நிதி உதவி இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தீர்மானமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் என்பதோடு, நிலையானதும் போட்டித்தன்மை மிக்கதுமான சூழலை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *