இந்தியா – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது :

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலையில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு கிரிக்கெட் போட்டி இடையில் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

முல்தானில் நேபாளத்தை வெற்றிகொண்டிருந்த பாகிஸ்தான், இந்த போட்டி கைவிடப்பட்டதால் மொத்தம் 3 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் இரவு 7.45 மணியளவில் நிறைவுக்கு வந்த சொற்ப நேரத்தில் சிறு மழை தொடர்ச்சியாக பெய்ததால் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாட முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தை கைவிடுதவாக இரவு 9.55 மணிக்கு மத்தியஸ்தர்கள் அறிவித்தனர்.

இது இவ்வாறிருக்க, இதே மைதானத்தில் நேபாளத்திற்கு எதிராக 4ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் அல்லது அந்தப் போட்டியும் கைவிடப்பட்டால் இந்தியா சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

முன்னதாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (02) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் ஏ குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் பிரகாரம்  267 ஓட்டங்களை பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

பவர் ப்ளே ஓவர்கள் நிறைவடைவதற்குள் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு, இஷான் கிஷான், ஹார்த்திக் பாண்டியா ஆகியோரின் நிதானத்துடனான 5ஆவது விக்கெட் இணைப்பாட்டம் கைகொடுத்தது.

நேபாளத்துடனான போட்டியில் முதல் 30 ஓவர்களில் எவ்வாறு பாகிஸ்தான் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதோ அதே நிலையைத் தான் இன்றைய போட்டியில் இந்தியா எதிர்கொண்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாரான மழை பெய்தபோதிலும் பல்லேகலையில் இதமான காலநிலைக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த நேரத்திற்கு (பிற்பகல் 3.00 மணி) ஆரம்பமானது.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா ஆகியோரின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் சிரமம் அடைந்தனர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய இந்தியா 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது சிறு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

33 நிமிட தடையின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்த போது இந்தியா இரண்டு பிரதான விக்கெட்களை இழந்தது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது ஷஹீன் ஷா வீசிய பந்து ரோஹிஷ் ஷர்மாவின் துடுப்பில் உராய்ந்தவாறு விக்கெட்டைப் பதம் பார்த்தது. ரோஹித் ஷர்மா 11 ஓட்டங்களைப் பெற்றார். (15 – 1 விக்.)

9 பந்துகள் கழித்து விராத் கோஹ்லியின் விக்கெட்டையும் ஷஹீன் ஷா அப்றிடி பதம்பார்த்தார். விராத் கோஹ்லி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்து அவரது துடுப்பின் விளிம்பில் பட்டு விக்கெட்டுக்கு சென்றது. (27 – 2 விக்.)

அடுத்து களம் நுழைந்த ஷ்ரேயாஸ் ஐயர் சற்று ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடிய போதிலும் 14 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பக்கார் ஸமானிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். (48 – 3 விக்.)

இந்தியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழைத்தூறல் மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டாவது தடவையாக பிற்பகல் 4.35 மணிக்கு தடைப்பட்டது.

இருபது நிமிட தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சில நிமிடங்களில் சூரியன் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியதுடன் மைதானம் காலை 10.00 மணி போல் காட்சி அளித்தது.

எவ்வாறாயினும் ஆட்டம் இந்தியாவுக்கு இலகுவாக அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் போன்று மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷுப்மான் கில் 32 பந்துகளில் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். (66 – 4 விக்.)

பவர் ப்ளே ஓவர்கள் நிறைவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இந் நிலையில் இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 138 ஓட்டங்கள் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவியது.

இஷான் கிஷான் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்தில் பாபர் அஸாமிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (204 – 5 விக்.)

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஹார்திக் பாண்டியா 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அவர்  7 பவுண்டறிகளையும் 1 சிக்ஸையும் அடித்திருந்தார். (239 – 6 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷஹீன் ஷா அப்றிடி மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இம்முறை ரவீந்த்ர ஜடேஜா விக்கெட் காப்பாளர் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து 14 ஓட்டங்களுடன் வெளியேறினார். (242 – 7 விக்.)

மொத்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாத நிலையில் நசீம் ஷாவின் பந்தை அரைகுறை மனதுடன் அடித்த ஷர்துல் தாகூர் (3), ஷதாப் கானிடம் பிடிகொடுத்து களம் விட்டு வெளியேறினார். (242 – 8 விக்.)

பின்வரிசை வீரர்களின் குல்தீப் யாதவ் 4 ஓட்டங்களுடன் நசீம் ஷாவின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (261 – 9 விக்.)

ஜஸ்ப்ரிட் பும்ரா 16 ஓட்டங்களைப் பெற்று நசீம் ஷாவின் பந்துவீச்சில் அகா சல்மானிடம் பிடிகொடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *