இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யப்போவதாக நினைத்துக் கொண்டு தற்போது பலரும் கட்சி தாவிக் கொண்டிருக்கின்றனர்: சஜித்

பாராளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யப்போவதாக நினைத்துக் கொண்டு தற்போது பலரும் கட்சி தாவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் செப்டெம்பர் 21ஆம் திகதி 170 இலட்சம் வாக்காளர்களே தமக்கான ஜனாதிபதியை தெரிவு செய்யப் போகிறார்கள் என்பதை நினைவுபடுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் வெள்ளிக்கிழமை (16) காலை கண்டியில் சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குருணாகல் மாவட்டத்தில் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை தாயை பலப்படுத்தும் பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு குருணாகால் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். நாம் நடைமுறை சாத்தியமான முற்போக்கான எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களுக்காக போராடினோம். ஐக்கிய மக்கள் சக்தியின் நிபுணத்துவ குழு ஊழல் மோசடிக்காக போராடியது. நான் மேடைகளில் நாடகங்களை அரங்கேற்றவில்லை. வெற்று ஆவண கோப்புகளை காட்டி மக்களை ஏமாற்றவில்லை.

எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாகிய ராஜபக்ஷக்களை நீதிமன்றத்தில் நிறுத்தினோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது சட்ட நடவடிக்கைகளால் நாடு வங்ரோத்து நிலையை அடைந்ததற்கு ராஜபக்ஷர்களே காரணம் என்று தீர்ப்பை கூட பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

இவர்களால் கொள்ளையிடப்பட்ட தேசிய சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் நாம் கொள்ளையர்களுடன் டீல் செய்ய மாட்டோம் என்று இன்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளிக்கிறேன்.

கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரங்களுக்கு எமது ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். சிறப்புரிமைகளுக்கும் பணத்துக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை விற்கும் கலாசாரத்தை நிறைவுக்கு கொண்டு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவுபடுத்துகின்றேன். தற்போது கட்சி தாவல்கள் பரவலாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் என்னுடன் இணைந்த எவரும் பதவிகளையும் வேறு சிறப்புரிமைகளையும் கோரவில்லை.

கொள்கை ரீதியிலே அவர்கள் என்னுடன் இணைந்தனர் சிறப்புரிமைகளை வழங்குவதற்கு என்னிடம் நிதி இல்லை. எம்மிடமுள்ள நிதியை கல்விக்காகவே ஒதுக்குகின்றோம்; ஓடக்கூடியவர்கள் ஓடி விட்டார்கள். இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதைப் போல நினைத்துக் கொண்டே அவர்கள் கட்சி மாறிக் கொண்டிருக்கின்றனர்.

செப்டம்பர் 21ஆம் திகதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால ஜனாதிபதியை தேர்வு செய்யப் போவதில்லை. மாறாக 220 இலட்சம் நாட்டு மக்களுக்காக 170 இலட்சம் வாக்காளர்களே ஜனாதிபதியை தெரிவு செய்யப் போகின்றனர் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *