ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் சச்சித்ர சேனாநாயக்க கைது!

இலங்கை கிரிக்கெட்‌ அணியின்‌ முன்னாள்‌ வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌.

இன்று (06) விளையாட்டு அமைச்சின்‌ விசேட புலனாய்வுப்‌ பிரிவில்‌ சரணடைந்ததையடுத்து சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர்‌ லீக்‌ (LPL) போட்டிகளின்‌ போது, ஆட்ட நிர்ணயம் செய்ய முயற்சித்ததாக சச்சித்திர சேனாநாயக்க மீது குற்றம்‌ சுமத்தப்பட்டுள்ளது.

2020 ஆம்‌ ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர்‌ லீக்‌ (LPL) முதல்‌ பதிப்பில்‌, துபாயிலிருந்து தொலைபேசி மூலம்‌ இரண்டு கிரிக்கெட்‌ வீரர்களை ஆட்டம் நிர்ணய செய்வதற்காக அணுகியதாக குற்றம்‌ சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இது தொடர்பான குற்றச்சாட்டுகள்‌ தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, சச்சித்ர சேனாநாயக்கவுக்கு கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றம்‌ பயணத்‌ தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து விளையாட்டு அமைச்சின்‌ விசேட விசாரணை பிரிவுக்கு (SIU) சட்ட மாஅதிபர் (AG) விடுத்த அறிவுறுத்தலைத்‌ தொடர்ந்து, முன்னாள்‌ சுழல் பந்து வீச்சாளர்‌ மீது மூன்று மாத பயணத்‌ தடையும் விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும்‌, சச்சித்ர அனைத்து குற்றச்சாட்டுகளையும்‌ மறுத்துள்ளதோடு, இவை தன்னையும்‌ தனது குடும்பத்தினரையும்‌ அவதூறு செய்யும்‌ நோக்கில்‌ எழுந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்‌ எனக்‌ கூறியுள்ளார்.

38 வயதான சச்சித்ர சேனாநாயக்க 2012 – 2016 காலப் பகுதியில் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட்‌, 49 ஒரு நாள்‌ மற்றும்‌ 24 ரி20 சர்வதேச போட்டிகளில்‌ விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *