ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான 10-ஆம் வகுப்பு மாணவன் சுமந்த தாஸ் உயிரிழந்தார்.
கடந்த அக்டோபர் 7ம் திகதி ஆசிரியரால் மாணவன் அடிக்கப்பட்டான். வீடு திரும்பிய மாணவன் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.
தனது அனுமதியின்றி சைக்கிளை எடுத்துச் சென்றதாக சக மாணவர் முறைப்பாடு செய்ததையடுத்து, ஆசிரியர் தனது மகனை அடித்ததாக சுமந்த தாஸின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.