அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை!

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இராணுவ இரகசியங்களை திருடி அம்பலப்படுத்தியதை  மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது.

யுத்த குற்றங்கள்குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரை தண்டிக்க நினைக்கின்றது  குற்றவாளிகளை தண்டிக்க முயலவில்லை என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் ஆப்கான்யுத்த குற்றங்கள் தொடர்பில் முதலில் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவர் யுத்தகுற்றவாளியல்ல மாறாக அதனை அம்பலப்படுத்தியவர் என்பது ஒரு கேலிக்கூத்தான விடயம் என சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் ரவான் அராவ் தெரிவித்துள்ளார்.

இது அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் கரிநாள் என மெல்பேர்னை சேர்ந்த மனித உரிமைகள் சட்ட நிலையத்தின் பதில் சட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

மக்பிரைட்டின் சிறைத்தண்டனை உண்மையை அம்பலப்படுத்தும்  ஆர்வம் கொண்டுள்ளவர்களிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியில் ஆவணங்களை பகிர்ந்துகொண்டதை தான் ஒருபோதும்இரகசியமாக வைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *