அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை சுவீகரிக்க இராணுவத்தினர் முயற்சி:

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலராலும் வியாழக்கிழமை (18) தடுத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்களா முன்னாள்வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், அன்ரனிஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் ஆகியோரின் தலையீட்டால்  குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்கமுடியாதென அப்பகுதிமக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை தற்போது 23ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், அங்கு இரணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள், இராணுவத்தினருக்கான விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெறும் இடமாகவும் அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணி காணப்படுகின்றது. அதுதவிர குறித்த காணியில் இராணுவத்தினரால் உணவகம் ஒன்றும் நடாத்தப்பட்டுவருகின்றது.

இந் நிலையில் துயிலுமில்லக்காணியின் வெளிப்புறத்திலேயே வருடாவருடம்  மாவீரர் நாளில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வாறான சூழலில் கடந்தவருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும்  மக்கள் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *