மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து பொலிஸார் அராஜகம் செய்துள்ளனர்.
கொடியேற்றலாம், கார்த்திகை மலரைப் பயன்படுத்தலாம், துயிலும் என்ற சொல்லை எந்தக் காட்சிகளிலும் பயன்படுத்தலாம், பதாகைகளை பயன்படுத்தலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று காலை வழங்கிய உத்தரவை பொலிஸார் புறக்கணித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
துயிலும் இல்ல காணி யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தின் 24ஆவது எஸ் எல் என் ஜி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த துயிலும் இல்லத்தில் மக்கள் நிம்மதியாக அஞ்சலி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் கோரி வருகின்ற நிலைமையில் இராணுவத்தினர் வெளியேறாத நிலையில் வீதியோரத்திலேயே மக்கள் சுடரேட்டிய அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் துயிலும் இல்ல காணியானது தனியார் காணியாக காணப்படுகின்ற நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாதிருந்த ஒரு பகுதி காணியை தனிநபர் ஒருவர் காணி உரிமையாளரிடருந்து பெற்று வர்த்தக நிலையமொன்றை அமைத்து நடாத்தி வருகிறார்.
இதற்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் மற்றும் வர்த்தக நிலையம் அமைத்த தனிநபர் ஆகியோரை வெளியேறி காணியை துயிலுமில்லத்துக்கு வழங்குமாறு கோரி போராடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இம்முறை 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்த போது இந்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கொடிகளை கட்டி விளக்குகள் வைக்க வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுடன் வர்த்தக நிலைய உரிமையாளர் முரண்பட்ட நிலையில் பணிக்குழுவினருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதனடிப்படையில் தருணம் பார்த்திருந்த காவல்துறையினர் அங்கு வருகை தந்து இரண்டு தரப்பினை சேர்ந்தவர்களிலும் சிலரைக் காவல் நிலையம் அழைத்து வந்ததோடு குறித்த இடத்தில் இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு தருணம் பார்த்திருந்த காவல்துறையினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த அலங்காரத்தை சிதைத்து மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த தனி நபர் மீதும் அங்குள்ள மக்கள் தங்களது விசனங்களை வெளியிடுகின்றனர்.
தங்களுடைய மக்களின் உரிமைக்காக போராடிய இந்த மாவீரர்களை வழிபடுவதை தடுப்பதற்கு இவ்வாறான எம்மாவர்களும் துணை போகின்ற செயற்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர்களில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறியிருப்பினும் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.