அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்:

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள சேவை கால நீடிப்பை இனி தொடர முடியாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை மற்றும் அனுமதிக்கு அமையவே சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட முக்கிய அரச உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும். அரசியலமைப்பு பேரவையால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிந்துரையை ஜனாதிபதியால் செயற்படுத்த முடியாது.

பொலிஸ் மா அதிபர் நியமனம் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எமது அரசியல் அனுபத்தில் இவ்வாறான இழுபறி நிலையை முன்னொருபோதும் கண்டதில்லை.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றது.புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் இழுபறி நிலையில் இருந்ததால் சி.டி.விக்கிரமரத்னவுக்கு இரண்டு முறை சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் பொலிஸ்டா அதிபருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு 2023.10.09 ஆம் திகதியுடன் நிறைவுப் பெற்றது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொள்ளவில்லை.

புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை பரிந்துரைக்குமாறு அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியது.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையை புறக்கணித்து முறையற்ற வகையில் பொலிஸ்மா அதிபருக்கு மூன்றுவார காலம் சேவை கால நீடிப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவது வெறுக்கத்தக்கது.

பாராளுமன்றத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்வது தொடர்பில் நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து பிரதமர் தலைமையில் கடந்த புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையை சகல எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன.ஒருசில எதிர்க்கட்சிகள் மாத்திரம் கலந்துக் கொண்டு தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகளை வன்மையாக கண்டித்துள்ளனர்.

தேர்தல் முறைமை திருத்தம் எவ்வாறான பெறுபேற்றை வழங்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.பெண் பிரதிநிதித்துவத்தில் திருத்தம் செய்தாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைத்த யோசனையால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.தற்போது உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் காணாமலாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இது பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.

2024 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெற வேண்டும். ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மறைமுகமாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டும் என்ற யோசனையை ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்கள் முன்வைத்தார்கள்.

அந்த முயற்சிக்கு நீதிமன்றம் தடையாக அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்துக் கொண்டதால் ஜனாதிபதி தேர்தல் 2024 ஆம் ஆண்டு இடம்பெறும் என்று குறிப்பிடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *