அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்துகிறது:

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது எமது நாடு எந்த திசையை நோக்கி நகர்கிறது என்று சிந்திக்க தோன்றுகிறது. இன்று நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதான் தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மீ்ண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இன்று மக்களின்  பிரச்சினைகள் திசைதிருப்பப்படுகின்றன. உத்திக பிரேமரத்ன மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை. மக்களின் பிரச்சினைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக பிரச்சினைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை தொடர்பில் அரசாங்கம் உரிய முறையில் ஆராய வேண்டும் 

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் மூலமாக இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் இனவாதிகளாக்கப்பட்டனர். நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டக்காரர்களை  கைது செய்வதற்கு  காட்டிய ஆர்வத்தை ஏன் ஈஸ்டர் தாக்குதலுக்கு காட்டவில்லை. 

தற்போதுள்ள பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது ஈஸ்டர் தாக்குதலே. இன்று சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரிய பேச்சாளர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விட்டதைப் போன்று மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தது நாங்கள் தான் என்பதை இப்போதுதான் சுட்டிக்காட்டுகிறார்கள். நீங்கள்  ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டறிவதற்கு ஏன் முன்வரவில்லை என்பதை கேட்க விரும்புகிறேன். 

பல கூட்டங்களை பல இடங்களில் நடத்துகின்றீர்கள். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். அன்று மௌனிகளாக இருந்தவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ் துரத்தி அடிக்கப்பட்டதன் பின்னர் பெரிய பேச்சாளர்களாக மாறியிருக்கிறார்கள். ஆகவே உங்களுக்கும் இந்த மௌலானாவுக்கும் என்ன வித்தியாசம் என நாம் கேட்ட விரும்புகிறோம். ஆகவே இது தொடர்பில் அரசாங்கம் கூடுதலா கவனம் செலுத்தி ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை கண்டறிய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *