இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (29) நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்துநின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகைதந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி சந்திப்பில் சிறிதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்லவேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறினார்.
அதற்கமைய இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித்தேர்தல் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின்கீழ் வாழமுடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்லமுடியாது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஜித் டோவலிடம் எடுத்துரைத்தார்.
ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த கஜேந்திரன், வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி முறைமையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தமிழ் பொதுக்கட்டமைப்பின் தீர்மானம் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்துநின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார்.
அத்தோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்று தான் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத்தகைய தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து சிந்தித்து செயலாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.