உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் முக்கிய தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர்.
எனவே அவர்கள் தொழில் நடவடிக்கைகளின் போதும், வேறு நடவடிக்கைளின் போதும் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் பரவலாக தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமரிடம் தெளிவுபடுத்தினார்.
எனவே இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, ஏனைய கட்சிகளுடனும் கலந்தாலோசித்து வேட்புமனுவை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதே வேளை மாகாணசபைத் தேர்தலை தற்போதுள்ள சிக்கலான முறைமையில் அன்றி, முன்னர் காணப்பட்ட முறைமையிலேயே அடுத்த வருடத்துக்குள் நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபர், தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசிக்குமாறும் ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் இடம்பெறும். இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும் என்றார்.