நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் இறங்கி வரலாற்று சாதனை படைத்த நிலையில், தற்போது அங்கு சில தனிமங்கள் இருப்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது. இந்த ஆய்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த தனிமங்கள் உலகையே மாற்றும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.
ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் தற்போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது நிலவில் இருக்கும் தனிமங்களை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருக்கிறது. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.
அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதேபோல தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் சல்பரை பிரக்யான் இருப்பதை ரோவர் நின்ற இடத்திலிருந்தே உறுதி செய்திருக்கிறது. இதெல்லாம் பொதுவாக தெரிந்த தகவல்கள். ஆனால் தெரியாத ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட பல தனிமங்கள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அதாவது பூமியின் மேல் வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலம் காரணமாக சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள் வடிகட்டப்படுகிறது. ஆனால் நிலவில் வளிமண்டலம் இல்லாததால் சூரிய கதிர்கள் நேரடியாக அதன் மீது விழுகின்றன. இதன் மூலம் சில தனிமங்கள் உருவாகிறது. அதாவது, யட்ரியம், கியூரியம் லந்தனம், சீரியம், பிரஸோடைமியம், நியோடைமியம், ப்ரோமெத்தியம், சமாரியம், யூரோபியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், எட்டர்பியம், லுடீடியம் போன்ற தனிமங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் மிகவும் முக்கியம். ஏனெனில் உலகம் எதிர்கொண்டுள்ள நான்காவது தொழில்நுட்ப புரட்சிக்கு மிகவும் அவசியமானது இந்த தனிமங்கள்தான்.
முதன் முதலில் மனிதன் உடை தயாரித்தது ஒரு புரட்சியாக சொல்லப்படுகிறது. பருத்தியிலிருந்து உடை தயாரிக்க முடியும் என்பது மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மகத்தான சாதனை. அதேபோல, நீராவி, பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் கொண்டு இயங்கும் மோட்டார்கள், மனிதன் கண்டுபிடித்த இரண்டாவது தொழிநுட்ப சாதனை. இந்த புரட்சி பட்டியலில் மூன்றாவதாக இருப்பது தகவல் தொடர்பு சாதனங்கள்தான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தகவல் அனுப்ப முடியும் என்கிற விஷயம் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நாம் நான்காவது தொழில்நுட்ப புரட்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம் என்று மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். காற்றாலை, சூரிய மின் தகடுகள் போன்ற ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பம், 3D பிரிண்டர், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், கிரிப்டோ தொழில்நுட்பம், அட்வான்ஸ் சென்ஸிங் டெக்னாலஜி (Advanced sensing technologies) போன்றவைதான் நான்காம் தொழில்நுட்ப புரட்சி. இதை சாதிக்கதான் மேற்கூறிய யட்ரியம், கியூரியம் லந்தனம், சீரியம், பிரஸோடைமியம், நியோடைமியம், ப்ரோமெத்தியம், சமாரியம், யூரோபியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், எட்டர்பியம், லுடீடியம் போன்ற தனிமங்கள் தேவைப்படுகிறது. இது நமது பூமியிலும் இருக்கிறது. ஆனால் மிக மிக குறைவான அளவு இருக்கிறது என்பதாலும், மற்ற தனிமங்களுடன் சேர்ந்திருக்கிறது என்பதாலும் இதை பிரித்தெடுத்து பயன்படுத்த அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.