யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை, சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என கூறி மறைமுகமாக திஸ்ஸ விகாரையை அகற்ற முடியாது எனும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூறியுள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ.
திஸ்ஸ விகாரையிலுள்ள தேரர்கள் மற்றும் கிராம மக்களுக்கு இந்த விடயத்தில் பிரச்சினைகள் இல்லை. ஆனால், சில அடிப்படைவாதக் குழுக்களே அனைத்தையும் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றைத் தூண்டிவிட்டு மக்களைக் குழப்புவது அந்தக் குழுக்களின் நோக்கமாக உள்ளது.
நாட்டில் எப்பாகத்தில் இருந்தாலும் ஆன்மீகத் தளங்கள் மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களை நாம் பாதுகாப்போம். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, வழிபடுவதற்குரிய சுதந்திரம் உள்ளது. அதனை நாம் பாதுகாப்போம். இந்தப் பிரச்சினையை வைத்து அடிப்படைவாத குழுவுக்கு அரசியல் இலாபம் தேடுவதற்கு இடமளிக்கமாட்டோம்- என்றார்.