Home உலக செய்திகள் தமிழ் நாட்டில் மட்டும் 1596 பேருக்கு கொரோனா – 50 இலட்சம் நஸ்டஈடு, தமிழ் நாடு...

தமிழ் நாட்டில் மட்டும் 1596 பேருக்கு கொரோனா – 50 இலட்சம் நஸ்டஈடு, தமிழ் நாடு அரசின் புதிய அறிவிப்பு!

26
0

தமிழ் நாட்டில் நேற்றைய பாதிப்புடன் சேர்த்து மொத்தமாக 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, கடந்த 24 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, ஒரே நாளில் 55 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக உயர்ந்ததோடு, மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்புப் பணியின்போது வைத்தியத் துறையினர் மட்டுமன்றி பொலிஸ் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்களில் எவரேனும் தொற்று ஏற்பட்டு துரதிஷ்டவசமாக இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேற்று (22-04-2020) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், “கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவத் துறை மட்டுமின்றி பொலிஸ் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்களில் எவரும் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

உயிரிழக்கும் பணியாளர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும்”

உயிரிழக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்துத் துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

கொரோனா தடுப்பு பணியின்போது அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் இறந்தால், அவர்களின் பணியை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் புதிதாக 1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 49 பேர் பலியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளதோடு இதுவரை 652 பேர் COVID-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.