Home செய்திகள் கிழக்கில் பொதுச் சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்புக்கு அழைப்பு: கிழக்கு தமிழர் ஒன்றியம்

கிழக்கில் பொதுச் சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்புக்கு அழைப்பு: கிழக்கு தமிழர் ஒன்றியம்

9
0

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நிலை கருதி எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர் எனவே பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத் தலைவர் ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்காக பொதுமக்களைத் தெளிவூட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்கு தமிழர் ஒன்றியம் கடந்த 2 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் தேர்தலில் பொதுச் சின்னத்திலே போட்டியிடவைப்பதற்கான முயற்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்தோம்.

அதன் பயனாக எல்லாக் கட்சிகளும் கிழக்கு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என மனதார விருப்பங்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் அறிக்கை மூலமும் தந்துள்ளனர். எனவே தேர்தல் திணைக்களத்தில் எங்களுக்கான பொதுச் சின்னம் அறிவிக்கப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு அந்தச் சின்னத்தை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

கிழக்கில் அதிக உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் அனுப்பி இந்த ஆட்சியாளரில் ஒரு பங்காளிகளாக மாறி கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.

இதேவேளை, கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் எக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். கிழக்கு தமிழர் ஒன்றியமும் தேர்தலில் தனித்துப் போட்டியிடாது என தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.