Home செய்திகள் வடக்கில் கால்பதிக்கும் சிங்கள பெளத்த பேரினவாத கட்சி!

வடக்கில் கால்பதிக்கும் சிங்கள பெளத்த பேரினவாத கட்சி!

55
0

சிங்கள பெளத்த பேரினவாத கட்சியான “லங்கா சமசமாஜ கட்சி” வடக்கிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரசாரங்களை நம்பி வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஏமாறாது எமக்கு வாக்களித்து மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தைப் பலப்படுத்த அணிதிரளுங்கள்” என யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பில் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச்செயலாளரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் கோட்டாபய ராகபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக அனைத்தும் பொய்கள் என நிருபணமாகியுள்ளது.இந்நிலையில் நாட்டினை முதலில் அபிவிருத்தி செய்யவேண்டும். மக்களின் பொருளாதாரம் முன்னேற வேண்டும். அதன் ஊடாக நாட்டில் உள்ள அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். அப்போது நாட்டில் உள்ள பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கும்.

எனவே தற்போது அபிவிருத்தியே முக்கியமாக உள்ளது. அந்த வகையில் நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டம் கிராம சேவகர்கள் ஊடாக சமுர்த்தி குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது. இதேபோல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் பாரிய மோதல்களை ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்தி வருகின்றது. கடந்த காலங்களில் கருப்பு ஜுலை கலவரம் போன்ற பல மோதல்களை இவர்களே ஏற்படுத்தினார்கள்.இதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி தப்பிக்க முடியாது. ஆனால் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்சிகளை அறியாது அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். தமிழ் கட்சிகள் கோட்டாபயவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கருதியே என தெரிவித்தார்.