Home உலக செய்திகள் தமிழ் நாட்டில் 2 மாவட்டங்கள் அதிகரிப்பு – மூன்றாக பிரிந்தது வேலூர் மாவட்டம்!

தமிழ் நாட்டில் 2 மாவட்டங்கள் அதிகரிப்பு – மூன்றாக பிரிந்தது வேலூர் மாவட்டம்!

13
0

வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் பகல் 1 மணிக்கும் நடந்தது.

விழாக்களுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும் 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட தொடக்கவிழாவில் ரூ.94 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கவிழாவில் ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.