Home தமிழகச் செய்திகள் கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்!

கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்!

24
0

மானாமதுரையில் வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது 31). இவர் மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வந்தார்.

பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றும் இவரது மனைவி திருமலாதேவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அங்கு மணிகண்டபிரபு நெஞ்சில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைப்பார்த்ததும் அவர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று மணிகண்ட பிரபு இறந்து கிடந்ததை பார்த்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டபிரபுவின் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.