Home தாயக செய்திகள் வடக்கை வாட்டும் வறட்சி – குடிநீரும் இன்றி தொற்று நோயிற்கும் உள்ளாகும் மக்கள்!

வடக்கை வாட்டும் வறட்சி – குடிநீரும் இன்றி தொற்று நோயிற்கும் உள்ளாகும் மக்கள்!

83
0

வடக்கில் நீண்ட காலமாக நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது அத்தியாவசியத் தேவைக்கு கூட நீர் கிடைக்காமல் பாரியளவிலான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கடந்த 6 மாத காலமாக மழையைக் காணாத இந்த மக்கள் தமது குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருப்பது மாத்திரமல்லாது, சிறுவர்கள் நோய்த் தொற்றுக்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். சில பகுதி மக்கள் சுமார் 3 கிலோமீற்றர்கள் தூரம் பயணித்து நீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

கால்நடைகள் உணவின்றியும் நீரின்றியும் உயிரிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் வீடு திரும்புவதில்லை. வறட்சியின் கோரத்தால் அவை ஆங்காங்கே இறந்து விடுகின்றன.

புங்குடுதீவு, மண்டைதீவு மற்றும் காரைதீவு உள்ளிட்ட யாழ். தீவகப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீவக மக்களின் ஜீவனோபாயமாகக் காணப்படுவது மீன்பிடித் தொழில். இங்குள்ள குளங்கள் மற்றும் சிறுகடல்கள் தற்போது நீரின்றி நிலப்பரப்பாகக் காட்சியளிக்கின்றன.

மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கின்ற சிறுதொகை வருமானத்தில் குடும்பச்செலவு, பிள்ளைகளின் கல்வி மற்றும் இதர தேவைகளை முன்னெடுத்துவரும் இவர்கள், இன்று வறண்ட பூமியைப் பார்த்து மழைக்காகக் காத்திருக்கின்றார்கள்.

வீதியின் இருமருங்கிலும் பச்சைப் பசேலெனக் காணப்படும் வயல் நிலங்கள் தற்போது வறண்டு, பாலம் பாலமாய் வெடித்துப்போய் இருப்பதை காணமுடிகிறது.