Home உலக செய்திகள் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்!

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்!

128
0

ஹட்டார் நாட்டில் நடைபெற்று வரும் 23 ஆசிய தடகளப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டத்தில் பங்கு பற்றி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் கோமதி மாரிமுத்து.

மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து மைதானமே இல்லா ஊரில் தன்னுள் இருந்த திறமையை வெளிக்கொணர பல சவால்களுக்கு மத்தியில் துணிச்சலோடு எதிர்கொண்டு சாதிக்கும் வெறியோடு அயராது உழைத்த கோமதி இன்று தான் பிறந்த ஊருக்கும், தமிழகத்திற்கும், ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது இவரது கிராமம்.

குறிப்பாக, இந்தக் கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் கூட கிடையாது. பேருந்து வசதிகள் குறைவுதான். அப்படி இருந்தும் தனது வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு தினமும் சென்று பயிற்சி செய்துள்ளார் தங்க மங்கை கோமதி.

இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின்மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

அதிகாலை 3 மணிக்கு எழும் கோமதியை, அவரது தந்தை மாரிமுத்து சைக்கிளில் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். ஒரு மகன், 3 மகள்களுடன் குடும்பம் வறுமையில் தவித்தபோது மாரிமுத்து – ராசாத்தி தம்பதியினர் தங்களது கடைசி மகளான கோமதியின் தடகள பயிற்சிக்கு ஊக்கமளித்து வந்துள்ளனர்.

2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார். இதற்கிடையே அவரின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இருப்பினும், தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி. தற்போது அவர் பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார்